சென்னையில் கடும் பனிமூட்டம் 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 10 விமானங்கள், தரை இறங்க முடியாமல் பெங்களூரு மற்றும் கோவைக்கு திருப்பி விடப்பட்டன.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது.
சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர்.
10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் கோலாலம்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு, துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 9 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
அதேபோல் மும்பையில் இருந்து சென்னை வந்த விமானமும் தரை இறங்க முடியாததால் கோவைக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் வானிலை சீரானதும் பெங்களூரு மற்றும் கோவைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்களும் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பி வந்தன.
மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20-க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
காரணம் என்ன?
பனி மூட்டம் அதிகமாக இருந்ததற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
சாதாரண சூழ்நிலையில் வெப்பநிலை கீழ் இருந்து மேலே செல்லும்போது குறையும். தற்போது வெப்பநிலை முரண் (டெம்பரேச்சர் இன்வெர்ஷன்) ஏற்பட்டு கீழ் இருந்து மேலே செல்லும்போது வெப்பநிலை அதிகமாகி உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை இந்த சூழ்நிலை நிலவும். அதனால் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.
சூரிய வெளிச்சம் நிலத்தில் படத்தொடங்கியதும், மீண்டும் பழைய சூழ்நிலைக்கு வந்துவிடும். குளிர்காலத்தில் இது ஏற்படுவது வழக்கம். இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை இருக்கும். வருகிற 8-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று நமக்கு குறைவதால் அந்த நேரத்தில் பனிமூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வருகிற 15-ந் தேதி வரை அந்த நிலை நீடிக்கும்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. உள் தமிழகம் முதல் உள் கர்நாடகா பகுதி வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
வருகிற 8-ந் தேதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிவரும் பட்சத்தில், வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கருதப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.