பெயர் குழப்பத்தால் பிரச்சினை; இரவில் வெற்றி, காலையில் தோல்வி 2 பெண் வேட்பாளர்கள் போட்டி போராட்டத்தால் பரபரப்பு

பெயர் குழப்பத்தால் நேற்று முன்தினம் இரவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பெண் வேட்பாளர், நேற்று காலையில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2 பெண் வேட்பாளர்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-03 22:02 GMT
கடலூர்,

கடலூர் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணும் பணி தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் இரவு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இதையடுத்து ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று விட்டு நேற்று அதிகாலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்க, வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி தான் வெற்றி பெற்றதாக அவரிடம் கூறினர். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, தான் வெற்றி பெற்றதாக கூறிவிட்டு, தற்போது விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக ஏன் கூறுகிறீர்கள் என கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தர்ணா

பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு எண்ணும் மையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே அங்கு வந்த விஜயலட்சுமி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை உடனே வழங்கக்கோரி பெரியார் கல்லூரி முன்பு தனது ஆதரவாளர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமியிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் கலெக்டர் அன்புசெல்வனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி முடிவை அறிவித்த பிறகு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றால், அதற்கு மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

பரபரப்பு

இதையடுத்து ஜெயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

ஜெயலட்சுமி, விஜயலட்சுமி பெயர் குழப்பத்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்