சீனா செல்கிறார் எடப்பாடி பழனிசாமி - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனா செல்ல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளது.

Update: 2020-01-01 12:16 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்து, அதிக அளவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது.

அங்குள்ள தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பங்களையும் பார்வையிட்டு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் கேட்டரிந்தார். 

அதன்பிறகு செப்டம்பர் 10-ந் தேதி சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து  ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அன்மையில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டு கலாசார உறவுகள், வர்த்தகம்,
குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தமிழ்நாட்டின் கலாசாரம் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழக அரசை வெகுவாக பாராட்டினார். சீனா சென்றதும் தமிழக முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் சீனா நாட்டு பிரதிநிதிகள் குழுவினர் சென்னைக்கு வந்து தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு தமிழக அதிகாரிகள் குழுவினர் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஜுன் மாதம் சீனா சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான அனுமதியை வழங்கி சுற்றுப்பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உள்ளது.

சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாசாரம், வர்த்தகம், போன்றவற்றைவலுப்படுத்தவும் அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ்
நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனா செல்கிறார்.

மேலும் செய்திகள்