ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.25 லட்சத்திற்கு ஏலமா? அதிகாரிகள் நேரில் விசாரணை

பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதா? என அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

Update: 2019-12-10 21:14 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.25 லட்சத்திற்கும், திருமல்வாடி கிராமத்தில் உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகள் தலா ரூ.50 ஆயிரத்திற்கும் ஏலம் விட்டதாகவும், இதற்காக திருமல்வாடி அரசு பள்ளி அருகில் கிராமமக்கள் கூட்டம் நடத்தி ஒருமனதாக ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பனைக்குளம் ஊராட்சியில் திருமல்வாடி, வத்திமரதஅள்ளி, பனைக்குளம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திருமல்வாடியை சேர்ந்தவரும், துணை தலைவர் பதவிக்கு பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு வத்திமரதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவரும் ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திருமல்வாடியை சேர்ந்த ஒருவர் ரூ.25 லட்சத்து 4 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்ததாகவும், இந்த ஏலத்தில் 5-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருமல்வாடி கிராமத்தில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் கிராமமக்கள் முடிவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் திருமல்வாடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடவில்லை என்றும், தலைவரை ஒருமனதாக தேர்வு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்