கம்ப்யூட்டர்-லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசம் - இது கடலூரில்

கம்ப்யூட்டர்-லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசம் என கடலூரில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-12-09 11:53 GMT
சென்னை,

வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக  சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. இதனால் ஆங்காங்கே வெங்காய  திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வை குறிப்பிட்டு ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது நாட்டில் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள கடும் கிராக்கி மற்றும் விலை உயர்வால் நாளுக்குநாள் வெங்காயத்தின் மவுசு அதிகரித்து வருவதால் வெங்காயத்தைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் வெளிவரத் துவங்கின.

நேற்று கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் வெங்காயத்தை மணமக்களுக்கு நண்பர்கள் பரிசளித்தனர்.  இந்த நிலையில் கடலூர் நகரின் மையப்பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே உள்ள கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய  வணிக நிறுவனம்  வெங்காயத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்துள்ளது. 

கடலூரில் உள்ள கணினி விற்பனை கடையில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்  வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தஞ்சாவூரில் மொபைல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வெங்காய விலை மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில சிறு தொழில் செய்பவர்கள் வெங்காயத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்