லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்
லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் கைப்பற்றிய தங்கநகைகளில் ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர்,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த அக்டோபர் 2-ந்தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகன சோதனையில் பிடிபட்ட மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சுரேஷ் சரண் அடைந்தார். தற்போது சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்று சுரேசை போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வேனில் வைத்து சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறும்போது,
லலிதா ஜூவல்லாரி நகைக்கடை கொள்ளை வழக்கில் என்னிடம் இருந்து போலீசார் 5.7 கிலோ நகையை பறிமுதல் செய்து உள்ளனர். ஆனால் 4.7 கிலோ நகையை மட்டுமே மீட்டுள்ளதாக கூறுகின்றனர். ஒரு கிலோ நகைக்கு நான் எங்கே போவது, ஒரு கிலோ நகை திருவாரூர் போலீசாரிடம் உள்ளது என கூறினார்.