வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30-ந் தேதிகளில் - 2 கட்டமாக தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் சர்ச்சை எழுந்து உள்ளது.

Update: 2019-12-03 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது.

புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உள்ளாட்சி தேர்தலை அதே மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக செய்து வந்தது.

இந்த நிலையில், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி மட்டும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 13-ந் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16-ந் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற விரும்புபவர்கள் 18-ந் தேதி அன்று பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

ஊரக பகுதிகளில் நடை பெறும் இந்த தேர்தலில் 3 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட இருக்கிறார்கள்.

ஓட்டு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4-ந் தேதியுடன் முடிவடையும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டமும், பதவி ஏற்பு நிகழ்ச்சியும் ஜனவரி 6-ந் தேதி நடைபெறும். மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலுக்கான கூட்டம் ஜனவரி 11-ந் தேதி நடைபெறும்.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவி இடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடக்கிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49 ஆயிரத்து 638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 27-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 30-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

எந்தெந்த பகுதிகளில் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்பது பற்றியும், எந்தெந்த பகுதிகளில் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்பது பற்றியும் 6-ந் தேதி அறிவிக்கப்படும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

இரண்டு கிராம ஊராட்சி வார்டுகள் இருந்தால், பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில், ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இந்த தேர்தலில் முதல் கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார்.

தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வுசெய்ய ஒவ்வொருவரும் 4 ஓட்டுகளை போட வேண்டும். அதற்காக 4 விதமான நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

அதன் விவரம் வருமாறு:-

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம்

கிராம ஊராட்சி தலைவர் - இளஞ்சிவப்பு நிறம்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - பச்சை நிறம்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள் நிறம்

இதேபோல், 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இள நீல நிறத்திலும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட இருக்கின்றது.

மேலும் செய்திகள்