நெய்வேலியில் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது கிராம மக்கள் பள்ளிகளில் தஞ்சம்
என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டதால் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு முதலாவது சுரங்கம், சுரங்கம் 1-ஏ மற்றும் 2-வது சுரங்கம் செயல்பட்டு வருகிறது. திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மின்சாரம் தயாரிப்பதற்காக என்.எல்.சி. அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
வழக்கமாக நிலக்கரி வெட்டி எடுக்கும்போது ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு, அந்தந்த சுரங்கங்களில் இருந்து கால்வாய், ஓடைகள் வழியாக ஏரிக்கு வெளியேற்றப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. சுரங்க நீருடன், மழைநீரும் கலந்து நின்றது. இதனால் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. ஆனால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை.
சுரங்கங்களில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டது. அந்த மழைநீர் அம்மேரி பகுதியில் உள்ள கால்வாயில் கலந்ததால் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி அம்மேரியில் உள்ள கிராம சாலையை அடித்துச் சென்றது.
தொடர்ந்து அம்மேரி, ரோமாபுரி, மேல்பாதி, வடக்கு வெள்ளூர் உள்பட பல கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, இடுப்பளவு தேங்கிய தண்ணீரில் தத்தளித்தபடி நடந்து சென்று, அந்தந்த பகுதியில் உள்ள 5 பள்ளிக்கூடங்களிலும், ஆலயங்களிலும் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
மந்தாரக்குப்பம் ரோமாபுரியில் உள்ள கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று காலை என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டதால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வடிய தொடங்கியது.