“உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல” மு.க.ஸ்டாலின் பேட்டி

‘உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல’, என்றும், ‘தி.மு.க. குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்’ எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-30 23:30 GMT
சென்னை, 

சென்னை கொளத்தூரில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பள்ளிகளுக்கு கணினி, பிரிண்டர், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள், மாணவர்களுக்கு புத்தகங்கள், மடிக்கணினி, பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 4 சக்கர தள்ளுவண்டி, மீன்பாடி வண்டி, இஸ்திரி பெட்டி, மாவு அரவை எந்திரம், கண் கண்ணாடி, புத்தாடைகள், மருத்துவ உதவி, திருமண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உண்மையைத் திரும்ப திரும்ப சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக நீதிமன்றத்துக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

3 வருடமாக இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க சார்பில், ‘தேர்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு போன்றவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் என சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு, இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர தி.மு.க தேர்தலை நிறுத்தியதாக சொல்லவில்லை.

ஆனால் தொடர்ந்து தி.மு.க. தான் நீதிமன்றத்துக்கு சென்று தடை போட்டு தேர்தலை நிறுத்திவிட்டதாக தவறான தகவலை பரப்புகிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன்.

ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா? என்பது என்னுடைய கேள்வி.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டாம். ஆனால், தேர்தல் நடத்தும் ஆணையத்திடமே ‘வார்டு வரையறையை முறைப்படுத்துங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களிடமிருந்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திலும் தி.மு.க. சார்பில் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் பதில் இல்லை. ஆகவே இதெல்லாம் முதல்-அமைச்சர் சொல்கிறாரா? ஆட்சி சொல்கிறதா? அரசு சொல்கிறதா? என்ற கவலை இல்லை. தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்தவேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையோடு இல்லை. பலமுறை கோரிக்கை வைத்து எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலைநாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டியவர்கள் நாங்கள். இந்த அரசு கூட்டவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. தான் கூட்டி, அங்குள்ள பிரச்சினைகளை கேட்டு, மனுக்களை பெற்றோம். ஆகவே தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தேர்தலை நிறுத்துவது நோக்கமல்ல. ஒருவேளை சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு தி.மு.க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்