ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து செயல்படுவது எவ்வளவு சாத்தியம்? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து செயல்படுவது எவ்வளவு சாத்தியம்? யாருக்கு சாதக பாதகமாக அமையும் என பார்க்கலாம்.

Update: 2019-11-20 05:51 GMT
சென்னை

தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. 

ரஜினியின் அரசியல் வருகை
 
இந்த நிலையில்  நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு ரஜினிகாந்த் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

இந்த நிலையில்  கமல்ஹாசனும்  தீவிர அரசியலில்   இறங்கினார்.  பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தன் கட்சிப் பெயரை அறிவித்தார். இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி களம் இறங்கி சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றது.

கமல்ஹாசன் கட்சியின் பலம்

கமலுக்கு நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்.

ரஜினியும், கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர்

ரஜினிகாந்த்- கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்க தயாராகி விட்டார் என்கிறார்கள்.  கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் தனது மன்றத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இதை ரஜினி- கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும்.

தமிழகத்தில் அதிசயம்

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியில் பேசும் போது, 

"2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியது. 

தமிழக மக்கள் நலனுக்காக

ரஜினிகாந்தின் இந்த பேச்சை தொடர்ந்து, வருகிற  சட்டமன்ற தேர்தலில்  ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ரஜினி, கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி  உள்ளதாக தகவல் வெளியாகியது.

அதை உறுதிபடுத்தும் வகையில் தமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  கூறியுள்ளனர்.

 இருவருமே தமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று தனித்தனியாக பேட்டி அளித்துள்ளனர். ஒடிசாவில் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்தார்.

விமர்சனம் அல்ல, நிதர்சனம்

விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம், ரஜினியுடன் இணைந்து அரசியல் பணியாற்றும் திட்டம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறும்போது, ரஜினியும் நானும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்துதான் உள்ளோம். அரசியலில் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். இப்பொழுது வேலைதான் முக்கியம். சேர்ந்து பயணிப்பது என்பது தமிழக மேம்பாட்டிற்காக பயணிக்க வேண்டியதாக இருந்தால் சேர்ந்து பயணிப்போம். 

நாடு எங்கும் ஏற்படும் தர்க்கம் இப்போது படிக்கும் கல்லூரிகளிலும் நுழைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினிகாந்த் கூறியது விமர்சனம் அல்ல, நிதர்சனம், உண்மை.

நிச்சயமாக இணைவோம்

பின்னர் சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடமும் நிருபர்கள் இதே கேள்வியை கேட்டனர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்” என்றார்.

 ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும்  இணைந்து  செயல்படுவது  என கூறி இருப்பது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
ஆனால் பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 

ரஜினி கமலின் இரண்டு பேருக்கும் முதல்வர் ஆசை உள்ளது. கமல்ஹாசன் பல மேடைகளில் தன்னுடைய முதல்வர் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோருடன் கடந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்றவற்றுக்கு அவர் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அண்மையில், மும்பையில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து, தமிழகத்தில் தமது அரசியல் எதிர்காலம் குறித்து விவாதித்தார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இதை தொடர்ந்து  தமிழக திராவிட கட்சிகளுக்கு போட்டியாக ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும்  இணைந்தால் சரியான போட்டியாக அமையலாம் என அறிவுரை கூறி இருக்க வாய்ப்பு உள்ளது.

யார் முதல்வர் வேட்பாளர்?

ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைவதால் யாருக்கு சாதகம் ? யாருக்கு பாதகம் ? இருவரும் திராவிட கட்சிகளுக்கு  சவாலாக அமைவார்களா?

நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது?  இவர்கள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், ஒருவேளை வெற்றியும் பெற்றால் யார் முதல்வர் ஆவார்? ரஜினி அல்லது கமல் இதில்  யார் விட்டுக் கொடுப்பார்?

ஆனால் இன்று தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்ய  உயர்மட்ட குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா கூறும் போது ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து செயல்பட்டால்  கமல்ஹாசன் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என கூறினார்.

யாருக்கு லாபம்?

கமல்ஹாசனுக்கு கடந்த கால அனுபவம் மூலம் அரசியல் என்றால் என்ன என்று புரிந்து உள்ளது. தனது கட்சியின் வலிமைஎன்ன? தனது கட்சியின் வாக்கு வங்கி எவ்வளவு என புரிந்து கொண்டுள்ளார்.  அதனால் தான் கடந்த இடைத்தேர்தலில் ஒதுங்கி பதுங்கி  ரஜினிகாந்த்  ஆதரவுடன் மீண்டும் விஸ்பரூபம் எடுக்க நினைக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் தேர்தல் மூலம் தனது வலிமையை வாக்கு வங்கியை நிரூபிக்கவில்லை.

ரஜினி காந்த்- கமல்ஹாசன் இணைந்து செயல்படுவது என்பது எந்த அளவு வெற்றியை கொடுக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது. தலைவர்கள் மட்டத்தில் உள்ள  ஒற்றுமை தொண்டர்கள் வரை இருக்க வேண்டும். அமைப்புக்குள்ளேயே பிரச்சினை என இருக்கும் போது அமைப்புகளுக்குள் கேட்கவேண்டாம்.

திராவிட கட்சிகளுக்கு எதிராக!

தற்போதைய நிலவரப்படி வரும் 2021  வது சட்டமன்ற தேர்தலில்  மும்முனை போட்டி நிலவும் என தெளிவாக தெரிகிறது.

1) ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி, 2) எதிர்க்கட்சி திமுக தலைமையிலான கூட்டணி, 3) ரஜினிகாந்த் - கமல்ஹாசன்  தலைமையினான கூட்டணி, இதில் அரசியல் ஆசை உள்ள நடிகர் விஜய் மற்றும் விஷால்  உள்பட  நடிகர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.

ஒரு காலத்தில்  தமிழகத்தில் சினிமாவும்- திராவிட அரசியலும் இணைந்து செயல்பட்டது.  ஆனால் வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு எதிராக சினிமா உலகமே திரண்டு நிற்பது போன்று  அமையலாம்.

மேலும் செய்திகள்