முதல்-அமைச்சரை பற்றி கருத்து கூற ரஜினிக்கு உரிமை உண்டு கே.எஸ்.அழகிரி பேட்டி
முதல்-அமைச்சரை பற்றி கருத்துக் கூற ரஜினிக்கு உரிமை உண்டு என்றும், அ.தி.மு.க.வினர் இந்த அளவிற்கு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை,
இந்திராகாந்தியின் 102-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாநில இளைஞர் அணித் தலைவர் அசன் ஆரூண், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் சவுமியா ரெட்டி உள்ளிட்டோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.
விழாவில், இந்திராகாந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து எஸ்.சி.பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், ஊடகத்துறைத் தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், தகவல் பெறும் உரிமை பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, நாஞ்சில் பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரஜினிக்கு உரிமை உண்டு
பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, “முதல்-அமைச்சரை பற்றி கருத்து சொல்ல ரஜினிக்கு உரிமை உண்டு. அவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதற்கு அ.தி.மு.க. இவ்வளவு கோபப்படவேண்டாம் என்பது எனது கருத்து. சென்னை மேயர் பதவியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து இருப்பது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. தனது கருத்தை சொல்வதற்கு வி.சி.க.வுக்கு உரிமை இருக்கிறது. எனவே, அவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்” என்றார்.
முன்னதாக, கே.எஸ். அழகிரி தலைமையில் வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.