கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-11-18 23:31 GMT
சென்னை,

தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி பிறப்பித்த அரசாணையில், அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்த அரசாணையால் கோவில் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள் பயன் அடைவார்கள். அவர்களுக்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மேலும், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று துணை மனுவும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பாதிப்பு ஏற்படாது

இதன்படி, தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆட்சேபனை இருந்தால் அந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவு எடுக்கப்படும். கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அரசாணையால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கூறியிருந்தது.

பொம்மை அதிகாரிகள்

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளடர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் ‘இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமா? அல்லது எல்லா மத வழிபாட்டு தலங்களுக்குமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பிளடர், ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு மட்டும் தான்’ என்று பதில் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த அரசாணையால் கோவில்கள் எப்படி பலனடையும்? அரசாணை மூலம் கோவில் நிலங்களை விற்பனை செய்ய இந்துசமய அறநிலையத்துறையை அரசு வற்புறுத்துகிறதா? அறநிலையத்துறை அதிகாரிகள் ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படும் பொம்மைகளாக உள்ளனர். அரசு தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனர்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

‘தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து தெரிவிக்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதை அரசு அமல்படுத்தியதா? என்று தெரியவில்லை.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் இல்லாமல் இந்த கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காது’ என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் அரசாணைக்கு தடை கேட்ட இடைக்கால மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்