பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார்.
இதே போல் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.
மனுதாக்கல்
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.
ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணைக்கு வரவில்லை என்று அவர் சார்பில் அவரது வக்கீல் மனுதாக்கல் செய்திருந்தார்.
தள்ளுபடி
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கிடையே கல்லூரி செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளும் ஆஜரானார்கள்.
நிர்மலாதேவி வராததால் விசாரணை நடக்கவில்லை. பின்னர் விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.