மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் நலனில் கவனம் செலுத்தாவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்பேசினார்.

Update: 2019-11-16 23:30 GMT
தர்மபுரி,

தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளோம். தமிழக பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளுக்கும் நமது எம்.பி.க்கள் குரல் கொடுக்கும் அளவிற்கு அபரிதமான வளர்ச்சியை நமது இயக்கம் பெற்று உள்ளது. நமது வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்கள் தி.மு.க.வையும், தனிப்பட்ட முறையில் என்னையும் விமர்சிக்கிறார்கள்.

ஆளுங்கட்சி மீதான பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் துணிச்சலுடன் விவாதிக்கவோ, கேள்வி எழுப்பவோ இல்லை. ஆனால் தி.மு.க. மீது மட்டும் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதையெல்லாம்விட கொடுமை என்னவென்றால் நான் மிசா காலத்தில் சிறையில் பட்ட சிரமங்கள், சந்தித்த சோதனைகள் குறித்து ஒருசிலர் விவாதிக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னை விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும், அருகதையும் கிடையாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகள். குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முதல்-அமைச்சரின் பினாமிகளாக செயல்பட்டு ஆட்சி கவிழாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி மாதம் ரூ.100 கோடி என ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஊழல் நடந்துள்ளது. மின்சார துறைக்கான உதிரிபாகங்கள் வாங்குவதில் மலையளவு ஊழல் நடந்துள்ளது. குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் நடந்துள்ளது.

நீட்தேர்வு, உதய் திட்டம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, புதிய கல்விக்கொள்கை, மோட்டார் வாகன சட்ட அமலாக்கம் என மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த அரசு காரணமாக இருந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் முதலீடு செய்ய முன்வருவார்கள். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே தொழில் நடத்திவரும் முதலீட்டாளர்களும் இங்குள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிமாநிலங்களுக்கு செல்லும் அவலநிலைதான் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடி நிதி கமிஷன் கேட்டதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் குறித்து நாள் தோறும் செய்திகள் வருகிறது. ஆனால் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதற்காக விருது பெற்றுள்ளதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைபட்டு கொள்கிறார்கள். சென்னையில் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். கோவையில் முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்து காயமடைந்த பெண்ணின் கால் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசக்கூடாது என அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் முடக்கம், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்களைக்கூட எளிதாக வாங்க முடியாத அளவிற்கு பொருளாதார முடக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு மக்கள்நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க. சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். பள்ளத்தில் விழுந்த தமிழகத்தை மீட்கும் இந்த போராட்டம் வெற்றி பெறும்போது தி.மு.க. கோட்டையில் கொடியேற்றும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்