ஐ.ஐ.டி. மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
ஐ.ஐ.டி. மாணவி மரணம் தொடர்பாக நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
சென்னை ஐ.ஐ.டி. மாணவி, பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்த்ததாகவும், அப்படி இருந்தும் தன் மகளைச் சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்ப்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது; நமது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான நிகழ்வாகும்.
தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், இந்த மாணவியின் சோகமயமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேரள முதல்-மந்திரி கோரியிருக்கிறார்.
மாநிலத்தை ஆள்பவர்கள், இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.
கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, நம் இந்திய தேசியக்கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலையில் பேராசிரியர்களுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறிந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:-
தற்கொலை செய்து கொண்ட ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா சாவில் மர்மம் இருப்பதற்கான பலத்த ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து பாரபட்சமற்ற விசாரணையை, தமிழக காவல்துறை நடத்தி, உண்மையை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. தன் பேராசிரியர்கள் சிலர் தான் இதற்கு காரணம் என்று பாத்திமாவின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியை தருகிறது. ஐ.ஐ.டி.யில் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தத்தில் 52 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்று ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி மனதை பதற வைக்கிறது.
இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி பாத்திமா. ஐ.ஐ.டி. தற்கொலைகளை காவல் துறையினர் முறையாக விசாரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.
மாணவியின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்ற அவலங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தலித் சமூகத்தை மாணவர்கள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களின் வரிசையில் தற்போது இஸ்லாமிய மாணவி பாத்திமாவும் பலியாகியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பு அணுகுமுறைகள் தான் இத்தகைய பலிகளுக்கு காரணமாகவுள்ளன.
இதனை கொலை வழக்காகவே பதிவு செய்து மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிய விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும். பலியான மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக மைய அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். அது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மட்டும் அல்ல, எதிர் காலத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும்.
இதேபோல் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் உள்பட பலர் மாணவி மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையை தருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மன அழுத்தங்களையும், சவால்களையும் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு படிப்பதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும். இதற்காக மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தேவையான கவுன்சிலிங் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.