கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தூத்துக்குடி வாக்காளர் நடத்த அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு

கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால், அவர் சார்பில் அந்த தொகுதி வாக்காளர் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2019-11-12 21:15 GMT
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால், அவர் சார்பில் அந்த தொகுதி வாக்காளர் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவிஞர் கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜனும், வாக்காளர் சந்தானகுமார் என்பவரும் தனித்தனியாக தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றதால், கனிமொழிக்கு எதிராக அவர் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார். இதற்கு சென்னை ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியது.

வாக்காளர் மனு

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர், கனிமொழி தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், கனிமொழிக்கு எதிராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதால், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் என்ற முறையில், தமிழிசை சார்பில் தேர்தல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று முத்துராமலிங்கம் கூறியிருந்தார்.

வழக்கு நடத்த அனுமதி

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் வக்கீல் ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆஜராகி, “மனுதாரர் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. வக்கீல் அணியின் தலைவர் ஆவார். ஏற்கனவே தேர்தல் நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வுக்கு எதிராக புகார் கொடுத்தார். தமிழிசை சவுந்தரராஜனுக்காக தேர்தல் பிரசாரமும் செய்துள்ளார். இந்த தகவல்களை எல்லாம் மறைத்து தொகுதி வாக்காளர் எனக்கூறி, தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்கு தொடர்ந்த நபர் அந்த வழக்கை திரும்பப் பெற்றால், அவருக்குப் பதிலாக அந்த வழக்கை தொகுதிக்கு சம்பந்தப்பட்ட வேறு யாரும் தொடர்ந்து நடத்தலாம் என்று கூறியுள்ளது. எனவே, முத்துராமலிங்கம் மனுவை ஏற்றுக்கொள்கிறோம். கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கை வாக்காளர் முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்