சென்னையில் மட்டும் 5 ஆண்டுகளில் 497 மான்கள் பலி; ஐகோர்ட்டில், வனத்துறை பதில் மனு
2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் வனத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை, கிண்டி சிறுவர் தேசிய பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ள வளாகங்களில் சுமார் 1500 மான்கள் உள்ளன. இந்த மான்களுக்கு போதிய உணவு கிடைக்காததால், கிடைப்பதை சாப்பிடுகிறது. இதனால் பிளாஸ்டிக் குப்பைகளும் அவற்றின் வயிற்றுக்குள் சென்று உயிர் பலியை ஏற்படுத்துகின்றன.
இதனால், வனத்துறையினர் இந்த மான்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர்.
இடமாற்றம் செய்யும்போது மான்கள் சில உயிர் இழந்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து, இந்த மான்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பதில் அளிக்கும்படி தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை ராஜ்பவன், ஐ.ஐ.டி. வளாகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதியில் புள்ளி மான்கள் வாழ்வதற்கான இயற்கை வாழ்விடம் உள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், மனிதர்களின் ஆதிக்கம், பிளாஸ்டிக் கழிவு, திடக்கழிவு, உணவுக்கழிவு போன்றவற்றை உண்ணுதல், காட்டு நாய்களின் தாக்குதல், கழிவுநீர் அருந்துதல் மற்றும் சாலையைக் கடக்கும் போது ஏற்படும் விபத்து போன்றவற்றால் புள்ளி மான்கள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் இவ்வாறு பலியாகி உள்ளன.
இறந்த மான்களுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவற்றின் வயிற்றில் 4 முதல் 6 கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தரமணி பகுதியில் இருந்து மான்களை இடமாற்றம் செய்யும்போது சில மான்கள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டியிருப்பது தவறானது.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இதுவரை 32 புள்ளி மான்கள் இறந்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் விபத்து மற்றும் பிளாஸ்டிக் கழிவு காரணமாக 2 மான்கள் இறந்துள்ளன.
எஞ்சிய மான்கள் ஐ.ஐ.டி. வளாக பகுதியில் இறந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் உள்ள மான்களை ஆபத்து இல்லாத மற்றும் வாழ தகுதியான சரணாலயங்களுக்கு இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நந்தனத்தில் இருந்த 42 புள்ளி மான்கள் மெட்ரோ ரெயில் பணிகளின்போது கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுபோல கடந்த ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 323 புள்ளி மான்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வனவிலங்கு பூங்காக்களில் விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ஆண்டுதோறும் சராசரியாக பல்வேறு காரணங்களால் 100 மான்கள் இறந்து வருகின்றன என்பதால் இந்த மான்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியமானது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.