என் அனுமதியில்லாமல் எடுக்கக் கூடாது - தலைவி படத்துக்கு தடை கேட்கும் ஜெ.தீபா
தனது அனுமதியில்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வரும் தலைவி படத்தை எடுக்க தடை விதிக்க கோரி தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதே போல் கவுதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.