சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் கண்காணிப்பு
சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை,
திபெத் மீது சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீன அதிபர் செல்லும் நாடுகளில் அவருக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி ஆகியோர் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதற்காக 11-ந்தேதி சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு ஏதேனும் ஒருவிதத்தில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பெரியார் தெருவில் தங்கி இருந்த திபெத்தியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். படிப்பு, பணி காரணமாக சென்னையில் தங்கி உள்ள திபெத்தியர்கள் நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுடைய செல்போன் எண்கள் ‘சைபர் கிரைம்’ போலீசார் மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கி இருக்கும் திபெத்தியர்கள் விவரங்களை சேகரித்து, அவர்களுடைய நடவடிக்கையையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.