பொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம்? தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவு இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சென்னை,
பொருளாதார மந்தநிலையால் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா?. பாதிக்கப்பட்டிருந்தால் அது வேலைவாய்ப்பிலும் எதிரொலிக்கிறதா? என்பது பற்றிய ஒரு பிரமாண்ட கருத்துக்கணிப்பை தந்தி டி.வி. நடத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பயணித்த கருத்துக்கணிப்பு குழு நூற்றுக்கணக்கான வர்த்தகர்களையும், 20 முதல் 30 வயது வரையிலான ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன் முடிவு இன்று (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு தந்தி டி.வி.யில் ‘மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சியில் வெளியாக உள்ளன.
வாகன தொழிற்சாலைகள் தொடங்கி பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வரை தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால் ஸ்தம்பித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. வேலைவாய்ப்புகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறதா?, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் எட்டும் இடத்தில் உள்ளதா? என்பதற்கான விடையையும் தருகிறது இன்று வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகள்.
வேலைவாய்ப்புகள்
பொருளாதார மந்தநிலை தனிப்பட்ட ஒரு வியாபாரியின் குடும்பத்தை பாதிக்கிறதா?, இந்த சூழலுக்கு யார் காரணம்?, பண மதிப்பிழப்பின் தாக்கம் இப்போது தான் எதிரொலிக்கிறதா?, ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் முக்கிய காரணமா?, தங்கவிலை உயர்வும் கூட வியாபாரத்தை பாதிக்கிறதா? போன்ற பல கேள்விகள் வியாபாரிகளிடம் முன்வைக்கப்பட்டன.
இன்னொரு பக்கம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை சந்தித்து வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கிறதா?, தற்போது பார்த்து கொண்டிருக்கும் வேலை திருப்தி அளிக்கிறதா?, பொருளாதார மந்தநிலை வேலைவாய்ப்புகளில் பிரதிபலிக்கிறதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இளைஞர்களின் மனநிலையை இன்று வெளியாகும் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்லப்போகின்றன.