பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை போதை மாத்திரையுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில், போதை மாத்திரையுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-08 21:39 GMT
சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் வரலாறு சிறப்புவாய்ந்த சந்திப்பு வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி சென்னையில் உள்ள லாட்ஜூகள், தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை மூலம் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

5 பேர் கைது

இந்தநிலையில் பெரியமேட்டில் உள்ள திருவேங்கடம் சாலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பெரியமேடு இன்ஸ்பெக்டர் செல்லப்பா மேற்பார்வையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது போதை மாத்திரையுடன் தங்கி இருந்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கிஷோர் பாபு(வயது 21), எண்ணூரை சேர்ந்த டேனியல் ராஜ்(26), தண்டையார்பேட்டையை சேர்ந்த அரவிந்த்(26), ஷோபன்ராஜ்(26), செங்குன்றத்தை சேர்ந்த வசந்த்(27) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த 420 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஷோபன்ராஜ், டேனியல்ராஜ் மீது தண்டையார்ப்பேட்டை, ராயபுரம் உள்பட போலீஸ்நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மும்பையில் இருந்து...

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘பெரம்பூரை சேர்ந்த அசோக் என்பவர் மூலம் மும்பையில் இருந்து ரெயில் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில் போலீசார் அசோக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்