குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை செவிலியராக நியமிக்க ஐகோர்ட்டு தடை
தகுதி மதிப்பெண்ணைவிட குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களை செவிலியராக நியமிக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 23-ந் தேதி தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 64.50 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 64 மதிப்பெண்களும், பழங்குடியினர் 54 மதிப்பெண்களும் பெறவேண்டும் என்று தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேர்வில் தகுதி மதிப்பெண்ணைவிட, குறைவான மதிப்பெண் பெற்ற 56 பேரை மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் தற்காலிகமாக தேர்வு செய்துள்ளது. 2,345 பதவிகளுக்கு தேர்வு நடத்திய நிலையில், தற்காலிக தேர்வு என்ற பெயரில் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,580 ஆக அதிகரித்து, அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர். எனவே, விதிமுறைகளுக்கு முரணாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஐகோர்ட்டு தடை
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, “குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கும், அவர் களுக்கு பணி நியமனம் வழங்கவும் தடை விதிக்கப்படு கிறது. இந்த வழக்கிற்கு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.