‘பூம் பூம்’ மாட்டிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து
‘பூம் பூம்’ மாட்டிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், ‘பூம் பூம்’ மாட்டுக்காரர்களுக்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டின் அருகே ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் ஒருவர் மாட்டுடன் சென்றார். இதனை பார்த்த அமைச்சர் டி.ஜெயக்குமார் ‘பூம் பூம்’ மாட்டிடம் ஆசி பெற்றார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வீடியோ வெளியிட்டு கருத்து கூறியிருப்பதாவது:-
“பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி...” என்பது அந்தக்கால இளசுகளின் ‘ரிங்டோன்’. இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது.
நாகரிகத்தை காப்பதும் ஒன்று தான்
ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், ‘பூம் பூம்’ மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மண்ணை தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் என்று பெருமைப்பட்டு கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது. இவர்களை காப்பதும் ஒன்று தான், நமது நாகரிகத்தை காப்பதும் ஒன்று தான்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.