திருவாரூர்: அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
திருவாரூர் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் உடனடியாக அரசு மருத்துவமனக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 72 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு சிறுமிகள் உட்பட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.