சின்னத்திரை நடிகைக்கு செல்போனில் தொந்தரவு; வாலிபர் கைது வெளிநாட்டில் இருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார்

சின்னத்திரை நடிகை நிலானிக்கு செல்போனில் தொந்தரவு கொடுத்து விட்டு, வெளிநாடு சென்ற வாலிபர் சென்னை திரும்பி வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.

Update: 2019-10-05 23:30 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் நடிகை நிலானி. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் சில ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களாக போரூரில் உள்ள, லட்சுமி நகரில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்தை விமர்சித்து, போலீஸ் உடையில் அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார். பின்பு இது தொடர்பாக நடிகை நிலானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அவரை காதலித்து வந்த காந்தி லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி லலித்குமார் சாவுக்கு நிலானி தான் காரணம் என புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

அதன் பின்னர், நடிகை நிலானிக்கு வேலூரில் உள்ள காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 32) என்பவர் அறிமுகமானார். இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மஞ்சுநாதன் நிலானியுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்பட்டது. மஞ்சுநாதனுக்கு திருமணமானது தெரிந்து நிலானி விலகி சென்றதால் அவருக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு நிலானியிடம் மஞ்சுநாதன் தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மஞ்சுநாதன் செல்போனில் நிலானிக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு போரூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மஞ்சுநாதன் வெளிநாட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்ததையடுத்து, மஞ்சுநாதனை நேற்று கைது செய்த போலீசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்