ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஜெயித்துவிட்டதாக செய்தி வருகிறது: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வருவதாகவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2019-10-05 23:00 GMT
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி பரணி கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

அவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அது 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். அதில் 49 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த அப்பாவு வெற்றி வாய்ப்பை இழந்தார். அ.தி. மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து கிட்டத்தட்ட 2½ வருடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரைதான் சட்டமன்றத்தில் உட்கார்ந்தார். இப்போது துன்பதுரையாக மாறி விட்டார்.

அப்பாவு 2½ வருடமாக நீதிமன்றத்தை நாடி போராடி வழக்கு போட்டார். இதில் ஓட்டுகளை மீண்டும் எண்ண கோர்ட்டு உத்தரவிட்டது. தபால் ஓட்டுகளை எண்ணும்போது கலவரம் நடத்தி தில்லுமுல்லு செய்து அப்பாவுவை தூக்கி வெளியேற்றி விட்டு 49 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி. மு.க. வெற்றி பெற்றதாக அப்போது அறிவித்துவிட்டனர்.

இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். முறையாக தேர்தல் நடந்திருந்தால் நாம்தான் ஆட்சியில் இருந்திருப்போம். 1 சதவீத வித்தியாசத்தில் தான் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. இன்னும் 10, 12 இடத்தில் நாம் வெற்றி பெற்றிருந்தால் தி.மு.க.தான் ஆட்சிக்கு வந்திருக்கும். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பிரதமர் நரேந்திரமோடி, அ.தி.மு.க. ஆட்சி அமைத்த மாதிரி வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்.

பிரதமரே வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார் என்றால் அதிகாரிகள் என்ன செய்வாங்க. ஆகவே தில்லுமுல்லு நடத்தி 49 ஓட்டு வித்தியாசத்திலே தி.மு.க. வெற்றி பெற்றதை அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து எம்.எல்.ஏ.வாக 2½ வருடம் இன்பதுரை பணியாற்றி கொண்டிருக்கிறார்.

இப்போது நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் வாக்குகளை எண்ணி உள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கையை சந்திப்பதாக இன்பதுரை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் இதை எண்ணக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளார். இதில் தவறு நடந்துள்ளது. அது வெளியில் வந்துவிடும் என்று பயப்படுகிறார்.

ஓட்டு எண்ணிக்கையை எப்படியாவது நிறுத்திவிட இன்பதுரை முயன்று கோர்ட்டை மீண்டும் நாடினார். இந்த வழக்கில் ஓட்டு எண்ணிக்கை முடிவை 23-ந்தேதி வரை அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவை நான் சொல்ல ஆசைதான். ஆனால் நான் சொல்லக்கூடாது கோர்ட்டு தான் சொல்ல வேண்டும். வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக்கில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதை யாராவது மறுக்கிறார்களா? என்றால் மறுக்கவில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் 21-ந்தேதி முடிந்து அந்த தேர்தல் முடிவு மட்டுமல்ல ராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவும் வந்து விடும். அப்போது ராதாபுரத்தையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்களை நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற செய்தி வரத்தான் போகிறது.

ஆகவே அடுத்ததாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட கூடிய ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமைய போகிறது. இப்போது நடக்கிற ஆட்சி அ.திமு.க. ஆட்சியே அல்ல.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைதான் இப்போது நிறைவேறி கொண்டு இருக்கிறது. எதையும் இந்த ஆட்சி தட்டிக் கேட்பதில்லை. அடிமைத்தனமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இப்போது மீண்டும் கட்-அவுட், பேனர் வைக்க இந்த அரசு கோர்ட்டில் அனுமதி கேட்டிருக்கிறது. இதைவிட வெட்கம் என்ன இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க.வை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ரவி தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த விமல், கேசவன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று திருவள்ளூர் தெற்கு மாவட்டம் பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம், வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் கோவில் குளம் மற்றும் ஆலங்குட்டை குளத்தை ரூ.27 லட்சம் செலவில் வேப்பூர் ஊராட்சி செயலாளர் எம்.இளையான் தூர்வாரி செப்பனிட்டார்.

இவருடைய பணியை பாராட்டி வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து காண்பித்து, எம்.இளையான் வாழ்த்து பெற்றார்.

மேலும் செய்திகள்