இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட: 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-10-05 22:00 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறை பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது; சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும்.

சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

“ஆட்சி அமைக்கக் கிடைத்திருக்கும் மெஜாரிட்டி, மக்கள் மனமுவந்து அளித்தது. அதை திருப்பி எடுத்துக்கொள்ளும் மாட்சிமை மிக்க அதிகாரமும் மக்களிடமே இருக்கிறது”. இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக்கொண்டுள்ள தற்காப்பு அரண். அதை மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜனநாயக நாட்டில், கருத்துரிமையை பறிப்பதும், மாற்று கருத்து கூறுவோரை தேசத் துரோகிகளாக சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. கடிதம் எழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதியவர்களுக்கு ஜனநாயக உள்ளம் படைத்தவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது என்பது எந்தவொரு ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை.

நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா?. அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்குப்பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்கள் 49 பேர் மீது பீகாரில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நாட்டில் நிலவும் சூழல் குறித்த தங்களின் ஆலோசனைகளைப் பிரதமருக்கு தெரிவித்ததற்காக ஒரு நீதிமன்றமே இத்தகைய நடவடிக்கை எடுக்க சொல்வது வருத்தமளிக்கிறது. எனவே, மத்திய அரசு இந்த வழக்கினைத் திரும்பப் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்