‘அதிகாரிகள் துணையின்றி முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை’ ‘நீட்’ தேர்வில் இந்திய அளவில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? ஐகோர்ட்டு கேள்வி

‘நீட்’ தேர்வில் தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய அளவில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-10-04 23:45 GMT
சென்னை,

மருத்துவ கல்லூரிகளில் முறையாக நிரப்பப்படாத வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டு இடங்களை பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்? ஆள்மாறாட்டம் தொடர்பாக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு மேற்படி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘இந்த மோசடி தொடர்பாக இதுவரை அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த 2 மாணவர்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 மாணவர்களும், இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நாடு முழுவதும் 14 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஒரே ஒரு இடைத்தரகர் மட்டுமே சிக்கியுள்ளார் என கூறுவதை ஏற்க முடியவில்லை. அரசு அதிகாரிகள் துணையின்றி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிவதில் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று கூறினர்.

பின்னர் இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழக சுகாதாரத்துறை, தமிழக டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆகியோரை நீதிபதிகள் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்தனர்.

பரிமாறிய தொகை எவ்வளவு? மேலும், ‘நீட்’ தேர்வில் தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய அளவில் வேறு எங்கும் இதுபோல ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? ஆள்மாறாட்டத்துக்காக எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது? இந்த மோசடியில் அரசு அதிகாரிகளின் பங்கு என்ன? மற்றும் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கைதானவர்களின் விவரங்கள், வழக்கின் தற்போதைய நிலை போன்ற விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்