ஐ.டி. நிறுவனங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஐ.டி. நிறுவனங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது. கல்லூரிகளின் வளாக வேலைவாய்ப்பு நேர்காணல்(கேம்பஸ் இன்டர்வியூ) புள்ளி விவரங்களின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.

Update: 2019-10-04 23:30 GMT
சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 3 ஆண்டுகளாக குறைவாகவே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அந்த தொழில்சார்ந்த வேலைவாய்ப்பு இல்லை என்பது பரவலாக பேசப்பட்டது.

பெரும்பாலான என்ஜினீயரிங் மாணவர்கள் படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து வந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல் செய்து கருத்துகளும் பரவி வந்தன.

இந்தநிலையில் தற்போது என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு, படிக்கும் போதே கல்லூரிகளில் நடக்கும் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் (கேம்பஸ் இன்டர்வியூ) அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

பொதுவாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஜூலை மாதம் முதல் மார்ச் மாதம் வரை வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், முதல் பாதியில் நடந்த வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து இருப்பதை காணமுடிகிறது.

என்ஜினீயரிங் படிப்புக்கு மவுசு குறைந்து வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், முன்னணி என்ஜினீயரிங் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையில் (ஐ.டி.) முக்கிய நிறுவனங்களாக கருதப்படும், டி.சி.எஸ்., விப்ரோ, காக்னிசன்ட், இன்போசிஸ் போன்ற 4 நிறுவனங்கள் வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம் என்ஜினீயர்களை பணியமர்த்துவதை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தகவலின்படி, தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களான அமேசான், விசா, டி ஷா, ஜோஹோ, கோடிங் மார்ட், ஹனிவெல், வெல்ஸ் பார்கோ மற்றும் பேபால் ஆகியவையும், தொழில்முனைவோர்களாக தற்போது தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி இருப்பவர்களும் அதிகளவிலான எண்ணிக்கையில் தகுதியுள்ள என்ஜினீயர்களை பணியமர்த்த தொடங்கியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான 4 கல்லூரிகளில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, வளாக வேலைவாய்ப்பு மூலம் மாணவர்களுக்கு 576 பணிக்கான வாய்ப்புகள் கிடைத்து இருந்தன.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம் 753 பணிக்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு வந்து இருக்கின்றன. இது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, 30 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், ‘நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட காரணத்தினால் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தைரியத்துடன் ஆட்களை பணி அமர்த்த தொடங்கி இருக்கின்றனர்’ என்றார்.

இதேபோல், சென்னை மாநகரில் அமைந்துள்ள முன்னணி என்ஜினீயரிங் கல்லூரிகளில் நடந்த வளாக வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு கிடைத்த பணிக்கான வாய்ப்பை(ஜாப் ஆபர்ஸ்) பார்க்கையில் உயர்ந்து இருக்கிறது.

இதில் மேலும் ஒரு நல்ல செய்தியாக, சென்னை நகரத்தை தவிர, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் நிறுவனங்கள் சென்று வளாக வேலைவாய்ப்பு மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர்.

எந்தெந்த பிரிவுகளில் வேலை? இதுவரை எலக்ட்ரானிக் வாகனம், இணைய பாதுகாப்பு, இணையதளம் மற்றும் தகவல் பதிவு ஆகிய பிரிவுகளில் பணி அமர்த்துவதற்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருகிற டிசம்பர் மாதம் முதல் நடைபெற உள்ள 2-வது பாதி வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் பல முக்கிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவார்கள் என்று வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

என்ஜினீயரிங் படிப்பில் வேலைவாய்ப்பு இல்லை என்று பரவி வந்த பல்வேறு கருத்துகளுக்கு, ஐ.டி. நிறுவனங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு பதிலடி கொடுத்து இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்