கீழடி அகழாய்வு தளத்தில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
கீழடியில் நடக்கும் 5 ஆம் கட்ட அகழாய்வை காண வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தொல்லியல் ஆர்வலர்களும் பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அகழாய்வு நடைபெறும் இடங்களை பார்க்க வருகின்றனர்.
பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, அங்கு பணியாற்றுபவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கீழடி அகழாய்வை பார்வையிட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி. ரோஹித்நாத் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன்படி அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடலாம். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.