தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் வெடிக்கும் - இல.கணேசன் சொல்கிறார்

தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் வெடிக்கும் என்று இல.கணேசன் கூறினார்.

Update: 2019-10-03 21:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புறப்பட்டு சென்ற புனித பயணத்தை இல.கணேசன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. உடனான பா.ஜனதாவின் கூட்டணி சுமூகமாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அவர்களின் வெற்றிக்காக அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்.

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்தினால் சிறந்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்று திரண்டு, எங்களுக்கு இந்தி மொழி கற்று தாருங்கள் என்று கூறி போராட்டம் நடத்தும் சூழல் வரும். எனவே தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் வெடிக்கும்.

பா.ஜனதாவில் தற்போது உட்கட்சி தேர்தல் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக கிளை வாரியாகவும், அடுத்த கட்டமாக மண்டல வாரியாகவும் கட்சி தேர்தல் நடைபெறும். இறுதி கட்டமாக டிசம்பர் மாதம் மாநில தலைவர் தேர்தல் நடைபெறும். தொடக்கத்தில் 36 ஆயிரமாக இருந்த பா.ஜனதா கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை தற்போது 36 லட்சமாக அதிகரித்து உள்ளது. இது இன்னமும் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்