தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடைகளை பராமரிக்க சிறப்பு பிரிவை உருவாக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு; பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடைகளை பராமரிக்க சிறப்பு பிரிவுகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-02 22:45 GMT
சென்னை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஜெக வீரபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறையில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடந்த 2003-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.39 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பாதாள சாக்கடை திட்டத்துக்கான ஒப்பந்தம் அறிவிப்பு வெளியிடுவது, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வது உள்பட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வாரியம் தான் மேற்கொண்டது. இந்த பணி 2006-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த பணி முடிந்த பின்னர் 5 ஆண்டுகளுக்கு பாதாள சாக்கடையை தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வாரியத்தின் என்ஜினீயர்கள், ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

அதன்பின்னர், நகராட்சி நிர்வாகம், இந்த பாதாள சாக்கடை குழாய்களையும், கழிவுநீர் ஏற்று நிலையம் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். ஆனால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்அனுபவம் எதுவும் நகராட்சி ஊழியர்களுக்கு இல்லை. இதனால், இந்த பராமரிப்பு பணிகளை அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்வதால், கழிவுநீர் குழாய்களில் கசிவு ஏற்படுகிறது. இந்த கழிவு நீர் சாலையோரம் குளம் போல் தேங்குவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் பராமரிப்பு அனுபவம் இல்லாமல், கழிவுநீர் கசிந்து சாலைகளில் தேங்கியுள்ளது.

எனவே, மயிலாடுதுறை பாதாள சாக்கடையை பராமரிக்க ஒரு திட்டத்தை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்ததும், கழிவுநீர் குழாய்களையும், கழிவுநீர் ஏற்று நிலையத்தையும் பராமரிக்க அனுபவம் வாய்ந்தவர்களை கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் வி.வைத்தியலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற நவம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்