திருச்சி நகை கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நகை கடை ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
திருச்சி,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் உள்ளன.
இந்நிலையில், நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. நகை கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கொள்ளை நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். உடனடியாக சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.