பள்ளியை சீரமைக்கக்கோரி 6 வயது மாணவி வழக்கு: மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராக - ஐகோர்ட்டு உத்தரவு

பழுதடைந்துள்ள பள்ளியை சீர் செய்யவேண்டும் என்று 6 வயது மாணவி தொடர்ந்த வழக்கிற்கு நேரில் ஆஜராகும்படி திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-30 23:00 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பழுதடைந்துள்ளதாகவும், இதை சீர் செய்யவேண்டும் என்றும், அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘மீஞ்சூரில் 1964-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கல்வியை கற்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. பள்ளிக்கூடங்களை சுற்றி பல ஆக்கிரமிப்புகள் உள்ளன.

பள்ளிக்கூடத்தை ஒட்டி அகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிச்சை எடுப்பவர்கள், பள்ளிக்கூடத்தில் வந்து ஓய்வு எடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் நிலை உள்ளது.

பள்ளிக்கூட கட்டிடமும் பழுதடைந்துள்ளது. இதையெல்லாம் சரி செய்யவேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு புகார் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பழுதடைந்த பள்ளிக்கூட்டத்தை சீர் செய்யவும், பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் முனுசாமி, ‘பள்ளிக்கூடத்தை சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று நடைபெறும் விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீலுக்கு உதவி செய்யும் விதமாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்