சாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2 அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு
சாதாரண மக்களுக்கும் விண்வெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய விஞ்ஞானிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நிலவுக்குள் சந்திராயன்-2 கால் பதிக்கும் நிகழ்வை காண இந்தியாவே காத்திருந்தவேளையில், மெல்லிய சிறிய இடைவெளியில் அந்த தருணம் பறிபோனது ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதிற்குள்ளும் சோகத்தை குடி கொள்ள செய்து விட்டது என்றாலும், விஞ்ஞானிகளின் முயற்சி அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. விஞ்ஞானிகளின் முயற்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உலகில் எந்த நாடும் செய்திராத முயற்சியான நிலவின் தென் துருவப்பகுதிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ‘இஸ்ரோ’வின் தலைவர் சிவன் உள்பட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.
‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்களிலும் கண்டிப்பாக பல வெற்றிகள் பெறுவார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. அவர்கள் புது நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகள் பல பெற என் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறேன்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- உலக நாடுகள் வியந்து பார்க்கும் வண்ணம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இதுவரை ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து இஸ்ரோ உச்சத்தை எட்டியுள்ளது. சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியை நிலவில் இறங்க வைக்கும் முயற்சியில் அல்லும், பகலும் அயராது பாடுபட்டு, கண்துஞ்சாது உழைத்த இஸ்ரோவின் தலைவர் சிவன், அவருக்கு உறுதுணையாக பணியாற்றிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரனை நோக்கி சாதனைகள் படைக்க முயலும்போது சந்திக்கும் சில சிறு சோதனைகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக கருதி, சவால்களை சமாளித்து, விரைவில் சந்திரனை அடைந்து சகாப்தம் படைக்கவிருக்கும் இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- கோடிக்கணக்கான மக்கள் விண்வெளி நோக்கி பார்க்கவும், அறிவியல் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. முன்பை விட நம்மை ஒரு படி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்கிறோம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக்கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது.
2.1 கி.மீ. இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான்-2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- கடந்த சில நாட்களாக, இந்தியா மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுமே சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் கலத்தின் பயணத்தை உற்றுநோக்கிக் கவனித்து வந்தனர். விண்வெளியில் வெற்றிகரமாக சுழன்று, நிலவை தொடுகின்ற வேளையில், தொடர்புகளை இழந்தது மிகப்பெரிய வேதனையாகும்.
இந்தப் பயணம், வெற்றி பெறவில்லை; என்றாலும் இது தோல்வி அல்ல. கூடிய விரைவில், இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள். இஸ்ரோ தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- சந்திரயான்-2 நிலவுப்பயணத்திற்கு நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப்பணிகளும், முயற்சிகளும் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி பயணம் வெற்றிகரமாக தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.
ஆர்.சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-
சந்திரயான்-2. இதை ஒரு தோல்வி என்று கருதிவிட முடியாது. வெற்றி படிக்கட்டில் கால் பதிப்பதற்கு, மற்றுமொரு படிக்கட்டு மீதம் இருப்பதாகவே கருத வேண்டும். இந்திய தேசத்தின் அளப்பரிய ஆற்றல் கொண்ட விஞ்ஞானிகளே, இஸ்ரோ கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது 120 கோடி நம்பிக்கைகளின் ஒற்றை இமாலய உருவமே என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
நிலவில் கால் வைத்தான் என்பது மட்டுமின்றி, நிலவை கைதும் செய்து விட்டான் இந்தியன் என்று, ஒரு தலைமுறை உரக்கச்சொல்லும் காலம் உங்களால் உருவாக்கப்பட இருக்கிறது என்ற உணர்வோடு, தொய்வின்றித் தொடர்ந்திடுங்கள் உங்கள் பணிகளை என்று பாராட்டி வாழ்த்துகிறேன்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்யும் முயற்சியில் இதுவரை எந்த நாடும் ஈடுபட்டதில்லை. அமெரிக்காவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த முயற்சியை தொடங்கவுள்ளது. இத்தகைய சூழலில் நிலவின் தென் பகுதியை சந்திரயான்-2 நெருங்கியதே மிகப்பெரிய சாதனை.
சந்திரயான்-2 முயற்சிக்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் உள்ளிட்ட அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- ‘இது தோல்வி என்று அர்த்தமல்ல. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கற்றதற்கான தருணம் வரும். இதுதான் அந்த அற்புதமான தருணம். விரைவில் நிலவை அடைவோம். இஸ்ரோவுக்கு நன்றி. தேசம் இஸ்ரோவை நம்புகிறது, பாராட்டுகிறது’ என கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத்தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.