எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் 12 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் 12 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Update: 2019-09-07 23:09 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி வெளிநாடுகள் சுற்றுப்பயணத்துக்காக புறப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, தொழில்நுட்பங்களை இங்கு கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பயணத்தை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு சென்ற அவர் துபாய் நகருக்கும் செல்கிறார். 14 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர் 10-ந் தேதியன்று தமிழகம் திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் லண்டன் பயணத்தில் சுகாதார துறை சார்பாக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த பயணத்தில் முதல்- அமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் இடம்பெற்றிருந்தார்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் நடந்த தொழில் முதலீட்டாளர்களுடனான கூட்டத்தில் முதல்-அமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.

அடுத்ததாக, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்றிருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு அமைச்சர்கள் பலரும் தனியாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் தனிப்பட்ட முறையிலும், சிலர் அரசு சார்பிலும், சிலர் இரண்டு காரணங்களுக்காகவும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 7 நாட்கள் அரசுமுறை பயணமாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு சென்று கல்வியாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பள்ளி மாணவர்கள் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், திறன் மேம்பாடு குறித்து அங்கு ஆய்வு செய்து தமிழகத்தில் நடைமுறைபடுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அந்நாட்டில் உள்ள வன உயிரின சரணாலயங்கள், இரவு கானக உலா, தமிழ்நாடு சூழலுக்கேற்ற வன மரபியல் சார்ந்த மரவகைகள் மற்றும் காட்டு தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து அவற்றை தமிழகத்திலும் செயல்படுத்த இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார்.

கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஏற்கனவே ரஷியாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் சென்றனர். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அவர்கள் சென்றதாக தெரிகிறது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், எகிப்து, கெய்ரோ நாட்டிற்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் சமீபத்தில் மொரீஷியஸ் நாட்டுக்கு சென்று தமிழகம் திரும்பினார்.

இந்த 12 அமைச்சர்களைத் தவிர, மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 28-ந் தேதியில் இருந்து அக்டோபர் 3-ந் தேதிவரை நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் செல்கின்றனர். நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை அவர்கள் பார்வையிட உள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹெகன் நகரத்துக்கு வரும் அக்டோபரில் செல்கிறார். அங்கு நடக்கும் மாநாடு ஒன்றில் அவர் பங்கேற்பார்.

ஒரு அரசில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் ஒரே காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்