6 நாள் பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு செல்கிறார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
6 நாள் பயணமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இன்றிரவு செல்கிறார்.
சென்னை,
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று அமைச்சர்கள் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் எகிப்து புறப்பட்டுச் சென்றார். இது தவிர சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்மும் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். அத்துடன் தொழிலாளர் துறை அமைச்சரான நிலோஃபர் கபீர், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றிருந்தார். அதுமட்டுமில்லாமல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர்கள் வெளிநாடு வரிசையில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 6 நாள் பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இன்றிரவு புறப்படுகிறார். 4 பல்கலைக் கழகங்களில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கையெழுத்திடுகிறார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் கால்நடை பல்கலை. துணை வேந்தர் பாலச்சந்திரன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.