பொருளாதார பின்னடைவை சரிசெய்ய பா.ஜ.க. அரசு முயற்சிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
‘அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மூட்டைகட்டி பொருளாதார பின்னடைவை சரிசெய்ய பா.ஜ.க. அரசு முயற்சிக்க வேண்டும்’, என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. சட்டம் போன்ற மத்திய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி படுவேகமாக பயணித்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியோ, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனோ சிறிதும் கவலைப்படவில்லை. 40 ஆண்டு காலத்தில் ஏற்படாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. விவசாயிகள், சிறுதொழிலாளர்கள் வறுமையில் தத்தளிக்கிறார்கள்.
பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை
கிராம வருமானம், கைக்கு எட்டாத தொலைவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்து 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சிநிலை குலைந்து போய் நிற்கிறது.
அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்யாதவற்றை அவசரமாகச் செய்திட துடிக்கும் மத்திய அரசு, அறிவுசார்ந்த பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகள்படி நடப்பதற்குத் தயாராக இல்லை. பொருளாதார வல்லுனர்கள் விடுக்கும் எச்சரிக்கைகளை பொருட்படுத்த முன்வரவில்லை.
பொருளாதார பின்னடைவு
எனவே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மூட்டைகட்டி மூலையில் எறிந்துவிட்டு, பொருளாதாரப் பின்னடைவை சரிசெய்ய முயற்சித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர வைக்க அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சோதனைகளில் இருந்து மீளும் வல்லமை இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு. எனவே பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை, மேலும் தாமதம் செய்யாமல் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் மாலை அணிவிப்பு
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள பூலித்தேவன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு தி.மு.க.வினர் வெள்ளிவாளை நினைவு பரிசாக வழங்கினார்கள்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். இன்னும் 8 முதல் 10 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளனர்.
வெள்ளை அறிக்கை
இந்த மாநாடுகளில் ரூ.5.5 லட்சம் கோடியில் தொழில்கள் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் ஏற்பாடு நடந்ததாக அறிவித்து இருந்தனர். ஆனால் அறிவிப்போடு தான் இதுவரை உள்ளது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து நான் ஏற்கனவே கூறி உள்ளேன். ஏற்கனவே வருவதாக கூறிய நிதியை திரட்டுவதற்கு பதிலாக பொழுதுபோக்கிற்காக அமைச்சர்கள் சுற்றுலா சென்றுவிட்டு முதலீட்டாளர்களிடம் நிதி திரட்ட செல்கிறோம் என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் தமிழக அமைச்சரவை சுற்றுலா துறை அமைச்சரவையாக மாறிவிட்டது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு அங்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும். தற்போது நாங்கள் போட்டியிடுவோம் என்று கூட்டணி கட்சியினர் கருத்து கூறுவது அவர்களுடைய உரிமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.