அனைத்து கட்சி குழுவை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
காஷ்மீரின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தகட்டமாக மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் அழுத்தம் கொடுக்கலாம், அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்திருந்தன.
அனைத்து கட்சி கூட்டம்
அதன்படி, காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.
மு.க.ஸ்டாலின் பேட்டி
அனைத்து கட்சி கூட்டத்தில், காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காஷ்மீர் பிரச்சினை குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் அடங்கிய ஒரு அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் காஷ்மீரில் நிலவக்கூடிய பிரச்சினைகள் குறித்து முழுமையாக அலசி ஆராயப்பட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
அந்த தீர்மானத்தின் முக்கிய அம்சமாக, மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய அனைத்து கட்சி குழு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்பி, அங்குள்ள மக்களோடு கலந்துரையாடி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திட மத்திய அரசு முன்வரவேண்டும்.
தீர்மானம்
இந்த முடிவு அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அதை கண்காணித்து மேற்கொண்டு என்ன நிலைமைகள் உருவாகிறது? என்பதை கூர்ந்து கவனித்து அதற்கு பிறகு மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும். அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும்? என்பதையும் இந்த கூட்டத்தில் நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.