சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2019-08-08 19:30 GMT
சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக விமான நிலைய ஆணையகம் அறிவித்து உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 

விமான நிலையத்தில் கார் பார்க்கிங், பயணிகள் பாதுகாப்பு சோதனை பகுதிகள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பார்சல்கள் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விமான நிலையம் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நுழைவு வாயிலிலேயே நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்கூட்டியே வரவேண்டும் 

எனவே விமான நிலைய உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் 1½ மணி நேரம் முன்னதாகவும், பன்னாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும் வரவேண்டும்.

பயணிகள் திரவ பொருட்கள், அல்வா, ஊறுகாய், ஜாம் போன்றவைகளை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமான நிலையத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்