காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
அத்திவரதரை தரிசிப்பதற்காக காஞ்சீபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காஞ்சீபுரம்,
அத்திவரதரை தரிசிப்பதற்காக காஞ்சீபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் திரண்டனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா தற்போது நடைபெற்று வருகிறது.
நின்ற கோலத்தில் அத்திவரதர்
கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 31 நாட்கள் சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை சுமார் 50 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.
கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசிக்கிறார்கள்.
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைகிறது. இதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நேற்று 38-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஞ்சள் மற்றும் அரக்கு நிற பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்தனர். இதனால் வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. இன்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்களை அணி, அணியாக பிரித்து போலீசார் கோவிலுக்குள் அனுப்பிவைக்கிறார்கள். பக்தர்கள் நேற்று 7½ மணி நேரம் வரிசையில் காத்து நின்று அத்திவரதரை தரிசித்தனர்.
ஏராளமான வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நகருக்கு வெளியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத், கீழம்பி பைபாஸ் மற்றும் தூசி, பொன்னேரி கரை வரை மட்டுமே வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து வேறு வாகனங்களில் சென்று பின்னர் நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டி இருக்கிறது. வழியில் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ஊக்கத்தொகை
இதற்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் இதுவரை மேற்கொண்ட ஏற்பாடுகள் குறித்தும், மேலும் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.
3 நாட்கள் விடுமுறை
மேலும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததை கருத்தில் கொண்டு காஞ்சீபுரம் நகராட்சிக்கு ஏற்பட்ட செலவினத்தை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி வழங்கும் என்று தெரிவித்த முதல்-அமைச்சர், பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்தில் கொண்டு, காஞ்சீபுரம் நகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வருகிற 13, 14 மற்றும் 16-ந் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரத்தில் வருகிற 13, 14 மற்றும் 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12-ந் தேதி பக்ரீத் விடுமுறை ஆகும். 15-ந் தேதி சுதந்திர தினம். எனவே தொடர்ந்து விடுமுறை வருவதால் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியை மிஞ்சிய கூட்டம்
திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க சாதாரண நாட்களில் தினந்தோறும் சுமார் 1 லட்சம் பேர் வரை வருவார்கள். ஆனால் தற்போது காஞ்சீபுரம் அத்திவரதரை தரிசிக்க கடந்த சில நாட்களாக தினசரி சுமார் 3 லட்சம் பேர் வரை வருகிறார்கள். அந்த வகையில் திருப்பதியை மிஞ்சி கூட்டம் வருகிறது.
வரும் நாட்களில், விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திவரதர் தரிசனத்துக்கு செல்ல காஞ்சீபுரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரெயில்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அத்திவரதர் சிறப்பு தரிசனத்துக்காக காஞ்சீபுரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் ரெயில் சேவை வருகிற 18-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. அதன்படி காஞ்சீபுரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் காஞ்சீபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கும், செங்கல்பட்டு-காஞ்சீபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.