தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜனதா நடந்து கொள்ளாது - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜனதா நடந்து கொள்ளாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதித்து அனுமதி மறுத்து உள்ளது. நதிநீர் பிரச்சினையில் 2 மாநிலங்களும் வஞ்சிக்கப்படாது. தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற பொய்யான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தன. ஆனால் தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜ.க. நடந்து கொள்ளாது என்று சொன்னேன். இதன்மூலம் அது தற்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீர் பிரச்சினை குறித்து ஜெயலலிதா கேள்விகேட்டதன் மூலம் அவரது தொலைநோக்கு பார்வை வெளிப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை நாட்டின் ஒற்றுமையாக பார்க்கவேண்டும். பா.ஜ.க.வின் கொள்கைக்கு எதிராக உள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளே காஷ்மீர் சீரமைப்பை வரவேற்று உள்ளன. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கின்றன.
இவ்வாறு செயல்படுவதால் தி.மு.க. தனிமைப்படுத்தப்படும். நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள்கூட தி.மு.க.வை ஆதரிக்காது. காஷ்மீர் மக்களும் இனிமேல் மற்ற மாநில மக்களை போல் உரிமைகளை பெற்று வாழ்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.