மாமூல் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும் டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை
மாமூல் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசாருக்கு, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் எச்சரிக்கை தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
மேலும் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றும், நன்கொடைகள், வெகுமதிகள், பரிசு பொருட்கள் போன்றவை வாங்குவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இன்னொரு எச்சரிக்கை தகவல் அனுப்பினார்.
லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்
இந்தநிலையில் டி.ஜி.பி. திரிபாதி தற்போது தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பியுள்ள இன்னொரு சுற்றறிக்கையில் மாமூல் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் எச்சரித்து உள்ளார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களிடம் இருந்து மாமூல் வாங்குவது கடுமையான குற்றமாக கருதப்படும் என்றும், இதுபோன்ற புகார்கள் வரும்போது, அந்த புகார்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கைகள் போலீசாரை கலங்கடித்து உள்ளது.