சில்லரை வியாபாரிகள் ஓய்வூதியம் பெற பதிவு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு
சில்லரை வியாபாரிகள் ஓய்வூதியம் பெற பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து சில்லரை வியாபாரிகள், சிறுகடை உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு மிகாமல் விற்று முதலீடு செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ‘பிரதம மந்திரி லகு வியாபாரி மான்தான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இணைந்து கொள்ளலாம். இதன் மாதாந்திர குறைந்தபட்ச சந்தா, வயதிற்கேற்றாற்போல் ரூ.55 என்றும், அதிகபட்ச சந்தா ரூ.200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு இணையான தொகையை மத்திய அரசு செலுத்தும். உறுப்பினர்கள் 60 வயது அடைந்த உடன் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறக்கும்பட்சத்தில் அவரின் கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சில்லரை வியாபாரிகள், சிறுகடை உரிமையாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறைசாரா தொழில் செய்பவர்கள் பயன்பெறுவர். அவர்கள் தங்களுடைய பெயர்களை வருகிற 9-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் http://lo-c-at-or.csc-c-l-oud.in/ என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுச்சேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.