நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றத்தில் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றத்தில் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-06 21:30 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புவி வெப்பநிலை அதிகரிக்கும்

காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மோசமாகவும், விரைவாகவும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அத்தீமைகளை கட்டுப்படுத்த உலக நாடுகள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் விரைவாக செயல்பட வேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவிலும் அதன் தாக்கங்களை உணர முடிகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் கடுமையான வெப்பமும், வறட்சியும் நிலவுகிறது. மும்பையில் வரலாறு காணாத மழை கொட்டி பாதிப்பை ஏற்படுத்துகிறது. புவி வெப்பநிலை அடுத்த சில ஆண்டுகளுக்குள் 1.5 செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துவிடும். அதை நாம் தடுக்காவிட்டால் இன்னும் கூடுதலான பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

போராட்டங்கள்

அதனால் தான், காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. நியூயார்க் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு மாநாடும், அதே வாரத்தில் நீடித்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. பொது அவை கூட்டமும் நடைபெறவுள்ளது.

அப்போது அதில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், செப்டம்பர் 20 முதல் 27-ம் நாள் வரை அமெரிக்கா உள்பட உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன.

அவசரநிலை பிரகடனம்

அதுமட்டுமின்றி, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் நோக்கத்துடன், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரீஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 உள்ளாட்சி அமைப்புகளும் இத்தகைய பிரகடனங்களை நிறைவேற்றியிருப்பதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்கள் ஆகியவையும் இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டு, காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளன. இதே அக்கறையும், பொறுப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையிலும், செயல்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசும், தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசும் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும். அப்பிரகடனத்தின் அடிப்படையில் காலநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புவியைக் காப்பாற்ற இந்தியா பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்