காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மத்திய அரசுக்கு ராம.கோபாலன் பாராட்டு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசிற்கு ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-06 20:11 GMT
சென்னை,

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்து முன்னணி ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வரும் 12 அம்ச கோரிக்கைகளில், காஷ்மீர் தனி அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்தபோது, பாரதம் வெட்டிப்பிளக்கப்பட்டு, ரத்த ஆறு பெருக்கெடுத்தது. அதனால், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தவன். காஷ்மீர் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட பாதிப்பை உணர்ந்தவன் என்பதால், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை நான் மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் வைகோ போன்றவர்கள் மக்களை திசைத்திருப்ப தேசவிரோதமாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதில் இருந்து காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு செய்வது வெற்று அரசியல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டும். நல்லதொரு தொடக்கமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, இந்த நடவடிக்கை அமையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்