மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கப்படுகிறதா? சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவ கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்படுகிறதா? என்பது குறித்து 2 மாதங்களுக்கு ஒரு முறை தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-05 22:32 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ஜெ.உமாராணி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து அழிப்பது இல்லை. அன்றாடம் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை, மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி முறையாக அப்புறப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மருத்துவமனை நிர்வாகங்களும், அரசு அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. உயிரி மருத்துவ கழிவுகளை அகற்ற அதிகாரபூர்வமான நபர்கள் நியமிக்கப்படுவதில்லை. ‘ஸ்டிக்கர்கள்’ ஒட்டப்பட்டு, தனித்தனியாக காலிப்பெட்டிகள் வைக்கப்பட்டு முறையாக உயிரி மருத்துவ கழிவுகள் ஆஸ்பத்திரிகளில் பிரிக்கப்படுவதில்லை. இதனால் தொற்று நோய் பரவி பொது சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், உயிரி மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் இதற்கென தனியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், உயிரி மருத்துவ கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு, அவை பாதுகாப்பாக அழிக்கப்படுகிறதா? இத்திட்டம் ஆஸ்பத்திரிகளில் செயல்பாட்டில் உள்ளதா? என்பது குறித்தும் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று ஆய்வு நடத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் இதுதொடர்பாக மாவட்ட அளவில் உள்ள கமிட்டிக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்

மேலும் செய்திகள்