தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தீரன் சின்னமலை மறைந்த ஆடி பதினெட்டாம் நாள், அவரது நினைவுநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று காலை அரசு சார்பில் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தீரன் சின்னமலை வாரிசுகளை கவுரவித்தார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருங்கிணைந்து நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த அரச்சலூர் ஓடாநிலையில் நமது சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மறைந்த ஜெயலலிதா மணிமண்டபம் கட்டினார். மக்கள் திரண்டு வந்து அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தி அவரது தியாகத்தை வீரத்தை போற்றி வழிபட்டு செல்கிறார்கள்.
மேலும் இங்கு மார்பளவில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு பதில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17-ந் தேதி புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அந்த சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என கூறினார்.