ஏழை மாணவர்களுக்கு ஐ.பி.எஸ் பயிற்சி அளிக்க திட்டம்: ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஜாங்கிட்
ஏழை மாணவர்களுக்கு ஐ.பி.எஸ் பயிற்சி அளிக்க திட்டம் என்று ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. எஸ்.ஆர்.ஜாங்கிட் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஐ.பி.எஸ் அதிகாரியாக காவல்துறையில் தமிழகத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது, சாதிக்கலவரங்களை போலீசாரின் ஒத்துழைப்புடன் கட்டுபடுத்தினேன்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றியபோது கும்மிடிப்பூண்டியில் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட வழக்கில், தனிப்படை அமைத்து, அதில் தொடர்புடைய பவாரியா கும்பலை கைது செய்தோம். சென்னை மாநகரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிப்பது எளிதாக உள்ளது.
போலீஸ் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கும் மற்றும் பிற ஏழை மாணவர்களுக்கும் ஐ.பி.எஸ். பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.