மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை,
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 136.8 கோடி ஆக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 8.12 கோடி ஆகும்.
2 கோடி பிறப்புகள் தடுப்பு
தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.83 சதவீதம் ஆகும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் 6 சதவீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் குடும்ப நல அறுவை மூலம் சுமார் 2 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.
புதிய கருத்தடை ஊசி தமிழகத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு இதுவரை 48,564 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவில் எளிய பாதுகாப்பான கருக்கலைப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் பிறப்பு விகிதம் அதிகமுள்ள 21 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை கண்டறிந்து, சிறப்பு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 680 முகாம்களில் 4,597 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 80.4 சதவீத தாய்மார்கள் 2 குழந்தைகளுக்கு பிறகு குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரிசு
பின்னர், உலக மக்கள் தொகை குறித்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மத்திய அரசின் குடும்ப நலத்துறை மண்டல இயக்குனர் ரோஷினி அர்தர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, குடும்ப நலத்துறை இயக்குனர் (பொறுப்பு) ஹரி சுந்தரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சுவாதி, இணை இயக்குனர் இந்துமதி ஆகியோர் கலந்துகொண்டனர்